Wednesday, February 27, 2008

சுஜாதா

அறிவியல் மீது ஒரு விதமான ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுத்து இதனைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தை என்னுள் உருவாக்கியது சுஜாதாவின் ஏன்? எதற்கு எப்படி? நூல்தான். புத்தகத்தின் பெயர் சரியாக குறிப்பிட்டிருக்கிறேனா என்று தெரியவில்லை ஆனால் அந்த புத்தகத்தைப் பற்றி இன்னும் நினைவிருப்பது சூப்பர் நோவா குறித்து அதில் எழுதி இருந்தது தான். ஒரு நட்சத்திரம் வெடித்து சிதறுவதன் மூலம் கோடானு கோடி சூரியன்களின் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் விட அதிகமான வெப்பமும், வெளிச்சமும் வெளியாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. அதனைப் பற்றி இப்போது எத்தனையோ முறை படித்தாலும், அதனைப் பற்றிய விளக்கங்களை, ஏன் அதனை வீடியோவாக பார்த்திருந்த போதிலும் அதனைப் பற்றி முதன் முதலாக படித்தது நெஞ்சில் பசுமையாக பதிந்திருக்கிறது.

அவருடைய இன்னொரு நாவல் பெயர் தெரியவில்லை அதில் எதிர்காலத்தில் இருந்து ஒரு மனிதன் வந்து நிகழ்காலத்தில் அவனுடைய முன்னோராகிய ஒருவரை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற கதை. எதிர் காலத்தில் இவர் சென்ற பின் பல பிரச்சனைகள் உருவாகும் அதற்கெல்லாம் காரணம் இந்த நிகழ்காலத்து முன்னோரின் கற்பனை என்பது போல அமைந்திருக்கும் அந்தக் கதை. சிறு வயதில் இதனைப் படித்து பிரமிப்புடன் சுற்றிய காலம் உண்டு.

என் இனிய இயந்திரா டீவி பற்றி தெரிய வந்த நாட்களில் தொடராக வந்ததாக ஞாபகம் அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து படித்த காலம் உண்டு.

கணேஷ் வசந்த் இதுவும் டீவி மூலமாகத் தான் அறிமுகமானார்கள். ஒய்.ஜீ. மகேந்திரன் வசந்தாக நடித்ததாக ஞாபகம். இதனைப் பற்றியும் சிறு வயதில் எனக்கு ஒரு Fascination இருந்தது.

பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களை தாண்டி வளர்ந்து விட்டாலும் சுஜாதா அவர்கள் என்னுடைய படிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு காரணி இருந்தார் என்பது உண்மை.

Tuesday, February 26, 2008

Super string and Ten dimensions

நாம் வாழ்வது ஒரு மூன்று பரிமாண உலகில் நீளம்(Length), அகலம்(Breadth), ஆழம்(Depth) என்ற மூன்று பரிமாணங்கள் தான் அவை.

ஆனால் பத்து பரிமாணங்கள் வரை இந்த பிரபஞ்சத்திலும் அதனைத் தாண்டியும் இருக்கலாம் என்று கண்டறிந்துக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் இதனை மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கி இருக்கிறார்கள்.

பத்து பரிணாமங்கள் பாகம் 1

பத்து பரிணாமங்கள் பாகம் 2

இதனைப் பற்றி எப்போதாவது முழுமையாக புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்ற ஆசை நெஞ்சில் எழுகிறது.

Sunday, January 13, 2008

அறிவியலும் ஆன்மீகமும் - 16

புது வருடத்தில் இருந்து மீண்டும் பதிவுகள் முன் போல் இட ஆரம்பிக்க வேண்டும் என்பது போல யோசித்திருந்தாலும் வருடம் ஆரம்பித்து 15 நாட்கள் கழித்தே பதிவுகள் இட ஆரம்பிக்க முடிந்திருக்கிறது.

History சேனலில் புதன் தோறும் "Universe" என்றொரு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் பார்க்க முடியாவிட்டாலும் பார்த்த வரை இந்தத் தொடரின் எல்லாப் பகுதிகளும் மிகச் சிறப்பாகவே இருக்கின்றன. அந்தத் தொடரில் பார்த்த ஒரு பகுதியால் கவரப் பட்டு அதனைப் பற்றி இணையத்தில் படித்ததை பகிரவே இந்தப் பகுதி.

நாம் வாழும் பூமி சுமார் 4.55 பில்லியன்(455 கோடி) வருடங்களுக்கு முன்னால் உருவானது. பூமி உருவானது எவ்வாறு என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் இப்படித்தான் உருவாகி இருக்க வேண்டும் என்று பல சித்தாந்தங்கள் உள்ளன. அவற்றில் பலரால் ஏற்றுக் கொள்ளப் படும் சித்தாந்தம் நெபுலா ஹைப்போதீஸில்(Nebula hypothesis). இந்த சித்தாந்தத்தின் படி சுமார் 5 பில்லியன்(500 கோடி) வருடங்களுக்கு முன்னால் நம்முடைய சூரிய மண்டலம் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய வாயு மண்டலம் இருந்திருக்க வேண்டும். இந்த வாயு மண்டலமானது சுருங்கி வெடிக்கும் சமயம் அதனுடைய மையத்தில் நமது மண்டலத்தின் நட்சத்திரமான சூரியன் உருவானது. நம்முடைய சூரிய மண்டலமே இந்த சமயத்தில் மிக மிக வெப்பமாக இருந்திருக்கும். இந்த வெப்பமானது குறையத் தொடங்கிய சமயம் சூரியனைச் சுற்றி உள்ள தூசிகள் எல்லாம் சேர்ந்து உருவானது தான் நம்முடைய பூமி என்கிறது இந்த சித்தாந்தம்.

இதற்கு மாற்றாக வேறு சில சித்தாந்தங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு இறந்து போன நட்சத்திரம் மீண்டும் உயிர்த்தெழும் சமயம் நம்முடைய பூமி போலவே கோள்களை உருவாவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இப்படி உருவான பூமி அந்த சமயத்தில் பூமியில் எல்லாமே உருகிய நிலையில் தான் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறைய உருகியவை இணைய ஆரம்பித்து தான் பூமியில் கற்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த சமயத்தில் பூமி முழுவதும் எரிமலைகளாக தோன்ற ஆரம்பித்து அதில் இருந்து கரியமலவாயு(கார்பன் டை ஆக்சைட்), மீதேன் போன்ற வாயுக்கள் வெளியேற ஆரம்பித்தன. அந்த சமயத்தில் பூமியில் பிராண வாயு(ஆக்ஸிஜன்) என்பது துளி கூட கிடையாது.

இப்படி இருக்கும் சமயத்தில் தான் பூமியில் 3.8 பில்லியன்(380 கோடி) வருடங்களுக்கு முன்னால் முதன் முதலாக நுண்ணுயிர்கள்(ஒரு செல் உயிரினங்கள்) தோன்ற ஆரம்பித்தன. அப்போது பூமியில் இருந்த வெப்ப நிலை மிக மிக மிக அதிகமானது இன்று பூமியில் இருக்கும் எந்த ஒரு உயிரினமும் அந்த சமயத்தில் பூமியில் தாக்குப் பிடித்து இருக்க இயலாது. இந்த வகை உயிரினங்களை எக்ஸ்டிரிமொபைல்(Extremophile) என்று அழைக்கிறார்கள்.

இவ்வகை உயிரினங்கள் மிக கடுமையான அல்லது மற்ற உயிர்களால் தாக்குப் பிடிக்க இயலாத சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடிக்கும் வல்லமை பெற்றவை.

இவ்வகை உயிரினங்கள் இன்று நம்மிடையே பூமியில் இல்லை என்றே பெரும்பாலானோர் நினைத்து வந்திருந்தனர். ஆனால் எரிமலைகளுக்கு அருகில் இருக்கும் நீர்நிலைகளில் மிக வெப்பமான சூழ்நிலைகளிலும் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டு பிடித்த உடன் இன்னும் இவ்வகை உயிரினங்கள் நம்மிடையே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இவ்வகை உயிர்கள் உருவாகுவதற்கும் அந்த சமயத்தில் பூமியில் தண்ணீர் உருவானதும் ஒரு வகை காரணமாக இருந்திருக்கிறது.

பூமியில் எப்படி தண்ணீர் உருவானது என்பதற்கு இன்றும் விஞ்ஞானிகளிடையே தெளிவான விளக்கங்கள் இல்லை. எப்படி இந்த அளவு தண்ணீர் உருவாகி இருக்கலாம் என்பதற்கு பல விதமான விளக்கங்கள் நிலவி வருகின்றன.

அதில் ஒரு விளக்கம், விண்கற்கள் வால் நட்சத்திரங்களில் பூமியில் மோதும் சமயம் அதில் இருக்கும் பனியானது உருகி தண்ணீர் உருவானது(பூமி முதன் முதலில் உருவான சமயம் விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் பூமியில் வந்து மோதுவது ஒரு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக இருந்தது) என்பது. தண்ணீர் இதன் மூலமாக வந்திருக்கலாம் என்பதற்கு மிக அதிகமான சாத்தியங்கள் இருந்திருந்தாலும் இப்படித்தான் என்று உறுதியாக அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை இன்றிருக்கிறது.

இன்னும் பல விதமான சித்தாந்தங்கள் தண்ணீர் எப்படி உருவானது என்பதற்கு நிலவி வருகிறது.

இப்படி உருவான தண்ணீரும் முதல் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பரிமாண வளர்ச்சி அடைந்து போட்டோசிந்தஸிஸ்(photosynthesis) மூலம் தன்னுடைய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்தன. இந்த போட்டோசிந்தஸிஸ் மூலமாகத்தான் கரியமலவாயுவை(carbon dioxide) பிராணவாயுவாக மாற்றி பூமியில் பிராண வாயு அளவு உயர காரணமாக அமைந்தது. இந்த நிகழ்வே இன்று பூமியில் நாம் நடமாட காரணியாக இருக்கிறது

கடவுள் மனிதனை தன்னுடைய வடிவமாக அமைத்தார் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மனிதன் கடவுளை தன்னால் புரிந்து கொள்ள இயலாத அற்புதங்களின் வடிவாக அமைத்திருக்கிறான். தேடலில் உள்ள பயமும் சலிப்புமே மனிதன் கடவுளை வடிவமைப்பதற்கு காரணியாக இருந்திருக்க வேண்டும்.

பூமி எப்படி உருவானது என்ற தேடல் கொடுத்த பயமும் சலிப்பும் தனக்கு எல்லாம் எல்லா சமயத்திலும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆணவமுமே கடவுள் பூமியைப் படைத்தார் என்ற அஞ்ஞானத்தை நம்மிடையே விதைத்திருக்க வேண்டும்.

ஆன்மீகம் என்பது ஒரு விதமான தேடல் என்பது மிகச் சிறப்பான கருத்து. தேடல் என்பதே ஆன்மீகம். தேடல் இல்லாமல் பழையன கழியாமல் புதியன புகுத்தலும் இல்லாமல் இருப்பது ஆன்மீகமாகாது. நம் பணி என்ன நாம் எதற்காக இங்கு இருக்கிறோம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடலில் தான் இருக்கிறது. ஆனால் தேடல் என்பது புதிய சிந்தாந்தங்களை சார்ந்து இல்லாமல் பழைய வேதாந்தங்களை சாரும் சமயம் அந்த வேதாந்தங்களைச் சார்ந்து அரசியல் செய்யும் குள்ள நரிகளை வளர்த்து நம் தேடல் தொலைந்து அஞ்ஞானமே மிஞ்சுகிறது.

வானில் நோக்கி தலை உயர்த்தி கடவுளை தினமும் புதிதாக பார்க்கும் திறன் நம்மிடையே இருக்கிறது அது போன்ற தேடல் தான் ஆன்மீகம் என்று அறியப்படுகிறது என்று நம்புகிறேன் நான்.

Tuesday, January 23, 2007

அறிவியலும் ஆன்மீகமும் - 15

ஏகாந்த இரவில் தலை சாய்த்து ஓய்வெடுத்து எங்கிருந்தோ கசிந்து வரும் இசையை ரசித்துக் கொண்டு மனதில் இனிமையான விஷயங்களை அசை போடும் தருணங்கள் மிக குறைவு என்றாலும் இயந்திரமாகி விட்ட என்னை மனிதனாக மீண்டும் உருப்பெறச் செய்யும் தருணங்கள் அவை.

இது போன்ற தருணங்களில் மனம் வேண்டுது மிக சிலவற்றையே மார்பில் சாய்ந்து கொள்ள என்னவள், சிரிப்பை பகிர நண்பன், வானில் வட்ட நிலவு.

நாணம் தலை தூக்கி மேகத்தின் பின் சென்று மறையவில்லை நிலவு என்றால் இவ்வுலகில் எழுதப்பட்ட எழுதப்படப் போகும் கவிதைகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து போய் இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

நிலவு கவிஞர்களோட கற்பனைக்கு மட்டும் இல்ல அறிவியல் அறிஞர்களோட ஆராய்ச்சிக்கு பல வகையில் உதவுது. இந்த பூமிக்கு மனிதனுக்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய ஆபத்து எதனால் என்றால் அது விண்கற்கள்(asteroids) மற்றும் வால் நட்சத்திரங்களினால்(comets) தான்.

இந்த விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்குத் தான் நிலவு உதவுகிறது. எப்படி? பூமியில் ஒரு விண்கல் வந்து விழுந்து ஒரு பள்ளம் ஏற்படுகிறது, அந்த பள்ளம் சில காலம் வரைக்கும் இருக்கும் ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளம் வந்து காற்று கொண்டு வந்து சேர்க்கும் தூசியால் மறைந்து விடும். ஆனால் நிலவில் காற்றும் கிடையாது தூசியும் நிரப்பாது அதனால் பல கோடி வருடங்களுக்கு முன்னால் விண்கற்களால் ஏற்பட்ட பள்ளம் கூட அப்படியே இருக்கும். இந்தப் பள்ளங்கள் விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திர ஆராய்ச்சிக்கு பல வகையில் உதவுகிறது.

விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் என்ன வித்தியாசம்?. விண்கற்கள் சூரியனை சுற்றி வரும் கற்கள் அவ்வளவே. விண்கற்களின் அளவு சில அடியில் இருந்து பல மைல்கள் வரை இருக்கும்.

வால் நட்சத்திரம் பல விண்கற்கள் மற்றும் உறைந்து போன தண்ணீர் அமோனியா போன்றவைகளின் கலவை. இவற்றை ஈர்ப்பு விசை ஒன்று பிணைத்துக் கொண்டிருக்கும். இந்த வால் நட்சத்திரங்களின் வால் பகுதி என்பது சூரியன் நெருங்கிச் செல்லும் சமயம் சூடாகி வெளியாகும் வாயுக்கள் தான்.

இந்த விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஏன் முக்கியமாக கருதப்படுகிறது என்றால் நம் நட்சத்திர மண்டலம் உருவாகும் சமயம் கிரகங்கள் உருவானது இது போன்ற பொருள்களில் இருந்து தான் என்றும் கிரகங்கள் உருவாகும் சமயம் எஞ்சிப் போனவைதான் விண்கற்களாகவும், வால் நட்சத்திரங்களாகவும் உருவாகுகிறது என்றும் சொல்லப் படுகிறது.

1994ல் Levy 9 என்ற வால் நட்சத்திரம் ஜூபிடர் கிரகத்துடன் மோதியது. அந்த வால் நட்சத்திரத்தின் முதல் பகுதி மோதிய சமயம் எழுந்த புகை மற்றும் தூசி மண்டலம் 1000 கி.மீக்கு மேலே வரை எழுந்தது. இரண்டாம் முதல் ஆறாம் பகுதி மோதிய போதும் அதே போல தான் நடந்தது. ஏழாம் பகுதி மோதிய சமயம் 3000 கி.மீ. வரை புகை மண்டலம் எழுந்தது.

பூமியில் இருந்து சரியாக பார்க்க முடியாத ஒரு கோணத்தில் இந்த மோதல் நடந்தது. ஆகவே இந்த மோதலைப் பற்றிய விவரங்கள் சரியான விவரங்கள் கிடைக்காது என்று நினைத்திருந்த விஞ்ஞானிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெரிய அளவில் மோதலின் அளவுகோல் இருந்ததால் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த மோதலில் சில பகுதிகள் ஜுபிடரில் பூமியின் சுற்றளவுக்கு நிகரான பெரிய பள்ளங்களை ஏற்படுத்தியது, சில பூமியின் சுற்றளவுக்கு பாதி அளவில் பள்ளங்களை ஏற்படுத்தியது.

இந்த வால் நட்சத்திரம் பூமியில் விழுந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று கேட்டால் சரியான முறையில் பதிலளிப்பது கடினம் இருப்பினும் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை.

சரி இது போன்ற நிகழ்வுகள் நிகழ வாய்ப்பு உண்டா எனில் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஜீபிடர் என்பது பூமியை விட பல மடங்கு பெரிய கிரகம் அதனால் அதனுடைய ஈர்ப்பு விசையால் வால் நட்சத்திரங்களும் விண்கற்களும் ஈர்க்கப் படும் வாய்ப்புகள் அதிகம் ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையாலும் இது போன்ற விண்கற்கள் ஈர்க்கப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் உண்மை.

மனிதன் மதங்களின் பேராலும் சித்தாந்தங்களின் பேராலும் இன்னும் என்னென்ன பிரிவினைகளை வளர்த்துக் கொள்ள முடியுமோ அத்தனை பிரிவினைகளின் பெயராலும் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறான். பிரபஞ்சத்தில் தன்னை தனக்குத் தெரிந்த அளவு யாருக்கும் தெரியாது என்று அகம்பாவம் கொண்டிருக்கிறான் மனிதன். தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதுதான் உண்மை என்ற அறியாமையில் இருக்கிறான் மனிதன்.

வானை பார்க்கும் திறன் கொண்ட மனிதனுக்கு என்ன பார்க்கிறான் என்று புரியாததால் குருடனாகவே இருக்கிறான். அகக்கண் திறக்க முயற்சி செய்யும் மனிதன் தன் புறக்கண்ணால் பார்க்கும் விஷயங்களை அறிந்து கொண்டாலே போதும் இந்த பிரபஞ்சத்தில் அவன் அறிந்து வைத்திருக்கும் இறைவனை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதை அறிந்து கொள்வான்.

மனிதன் என்பவன் அற்பமான கண்ணுக்கு புலப்படாத ஒரு கிருமி இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் சமயம். தனக்குத் தெரிந்தது தான் எல்லாமே என்ற அகந்தையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் மனிதன் கண்ணைத் இருந்தும் குருடனாக இல்லாமல் அற்பமான இந்த வாழ்வில் அமைதியாக காலத்தை கழிக்க முயற்சி செய்ய வேண்டும்.

Wednesday, January 17, 2007

அறிவியலும் ஆன்மீகமும் - 14

முதல் பகுதி

சென்ற பகுதியின் நினைவுகூறல். பிரமாண்ட கரும்பள்ளங்களைக் கண்டுபிடிக்க இந்த பிரபஞ்சத்தின் பிரகாசமான பகுதிகளான குவேசார்களை(quasar) விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்தார்கள். அவர்கள் அந்தப் பகுதிகளை ஆராயக் காரணம், அங்கு வெளியாகும் பிரகாசம் பல நட்சத்திரங்கள் சூப்பர் நோவா என்ற முறையில் வெடித்துச் சிதறுவதால் ஏற்படுகிறது. இப்படி பல நட்சத்திரங்கள் மிக விரைவில் அழிக்கக் கூடிய சக்தி ஒன்று அந்த குவேசார்களில் இருக்க வேண்டும் என்று கணித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்த சக்தி பிரமாண்டமான கரும்பள்ளங்களாக இருக்க வேண்டும் என்று கணித்து குவேசார்களை ஆராயத் தொடங்கினர்.

ஆலன் டிரெஸ்டர்(Alan Dressler) என்பவர் தான் அந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர்.

கரும்பள்ளங்களை நேரடியாக கண்டு கொள்வது என்பது மிகக் கடினமான செயலாகும். வெளிச்சத்தை உமிழாத, பிரதிபலிக்காத பொருளை அடையாளம் கண்டு கொள்வது என்பது முற்றிலும் இயலாத காரியமாகும்.

சாதாரண வகை கரும்பள்ளங்களை அவற்றில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஆனால் quasar போன்ற மிக வெப்பமான பிரகாசமான இடத்தில் இருந்து பல விதமான கதிர் வீச்சுக்கள் வெளிப்படும். அவற்றின் நடுவில் இருப்பதாக கருதப்படும் பிரமாண்ட கரும்பள்ளங்களில் இருந்து கதிர் வீச்சுக்கள் வருகிறதா என்பதை கண்டு கொள்ளவே முடியாது.

ஆகவே பிரமாண்ட கரும்பள்ளங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் அது இருப்பதால் அதன் புவியீர்ப்பு விசையின் பாதிப்பால் அதனைச் சுற்றி இருக்கும் நட்சத்திரங்கள் எப்படி சுழல்கிறது எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் சுற்றி வருகிறது இல்லையா? அதே போல அந்த பிரமாண்டமான கரும்பள்ளங்களை நட்சத்திரங்கள் சுற்றி வரும் என்றும், அந்த பிரமாண்ட கரும்பள்ளுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் மிக வேகமாக சுற்றி வரும் என்றும் கணித்தார்கள்.

அப்படி வேகமாக சுற்றி வந்தால் அங்கே பிரமாண்டமான கரும்பள்ளங்கள் இருப்பதை நிரூபணம் செய்து விட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தார்கள்.

இப்படி முடிவு செய்த ஆராய்ச்சியாளர்கள் இரு அண்டவெளிகளை கவனிக்க முடிவு செய்தார்கள். quasar அண்டவெளி ஒன்றையும், நமது பக்கத்தில் இருக்கும் அண்டவெளியான ஆண்டிரோமீடா(Andromeda) அண்டவெளியையும் கவனிக்க முடிவு செய்தார்கள்.

இந்த இரு அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களின் நகர்வு, சுழற்சி போன்றவற்றை ஒப்பிட்டு முடிவுகளை வெளியிடலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சிரியத்துக்குள்ளாக்கியது.

quasar அண்டவெளிகளில் இருக்கும் நட்சத்திரங்களின் நகர்வு, சுழற்சி எதையும் அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்களால் முடியவில்லை.

நமக்கு மிக அருகில் இருக்கும் அண்டவெளியான ஆண்டிரோமீடியாவில் இருக்கும் நட்சத்திரங்களின் நகர்வு, சுழற்சி போன்றவை தான் இவர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு பிரமாண்ட கரும்பள்ளம் அண்டவெளியின் நடுவில் இருந்தால் நட்சத்திரங்கள் எப்படி சுழலும், எப்படி நகரும் என்று கணித்திருந்தார்களோ அந்த கணிப்பிற்கு ஏற்றவாரே அவை அமைந்திருந்தது.

இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் மட்டும் அல்ல அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இதனை யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

இந்தக் கண்டிபிடிப்பினால் ஆராய்ச்சியாளர்களுக்கு எழுந்த முதல் கேள்வி, ஏன் Quasar அண்டவெளிகளில் நிகழ்வது போல நட்சத்திரங்கள் அழிவு, வெப்பம், பிரகாசம் போன்றவை ஆண்டிரோமீடா அண்டவெளியில் ஏற்படவில்லை நிகழவில்லை என்பது தான்.

ஆனால் இதனைப் பற்றி மேலும் ஆராய ஆரம்பித்த போது இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய ஆரம்பித்தது.

ஆண்டிரோமீடா அண்டவெளியில் இருக்கும் கரும்பள்ளம் ஒரு காலத்தில் Quasar அண்டவெளியில் நடப்பது போல பல நட்சத்திரங்களை தன்னுள் இழுத்துக் கொண்டிருந்தக் வேண்டும் என்பதை கண்டறிந்தார்கள். அப்படி இழுத்து கொண்டே இருந்த கரும்பள்ளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்த உடன், அந்த கரும்பள்ளங்களில் நடுவில் இருக்கும் சிங்குலாரிட்டி(Singularity) நிலை ஏற்படுத்தும் பாதிப்பு கரும் பள்ளங்களின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க குறைய ஆரம்பித்து இருக்க வேண்டும். அதனால் எல்லாவற்றையும் அதனுள் இழுத்துக் கொள்வது நின்று அதன் புவியீர்ப்பு விசையால் நட்சத்திரங்கள் அதனை சுற்றி வரத் துவங்கி இருக்க வேண்டும் என்றும் கண்டு உணர்ந்தார்கள்.

இந்த செய்தியை இந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட சமயம் பலத்த சலசலப்பு உண்டானது. பலர் இந்தக் கண்டுபிடிப்பு எந்த அளவு சரியானது என்பது போன்ற கேள்விகள் எழுப்பத் துவங்கினர்.

இதனால் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது போன்ற மேலும் சில அண்டவெளிகளில் இருக்கும் பிரமாண்ட கரும்பள்ளங்களை கண்டு பிடித்து வெளியிட வெண்டியது அவசியமானது.

ஆகவே இவர்கள் மேலும் பல அண்டவெளிகளில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

இங்கும் இவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

ஏதோ மேலும் ஒரு அண்டவெளியையாவது கண்டுபிடிக்கலாம் என்று ஆரம்பித்த ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் ஆராய்ச்சி செய்த எல்லா அண்டவெளிகளிலும் பிரமாண்ட கரும்பள்ளங்கள் கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்ட உடன் விஞ்ஞான உலகம் இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தது.

பலர் இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள்.

இவர்களில் சிலர் நம் சொந்த அண்டவெளியான பால் வீதியின் நடுவிலும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவர்களுக்கு இங்கே மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

நம் சூரிய மண்டலத்தின் மொத்த சுற்றளவை விட பெரிய கரும் பள்ளம் ஒன்றை நம் பால் வீதியின் நடுவில் கண்டு பிடித்தார்கள்.

பல பில்லியன் சூரியனின் எடை கொண்ட இந்த கரும்பள்ளம் Sgr A* என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகள் அண்டவெளிகளின் தோற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை பாதித்துள்ளது. அண்டவெளிகள் இதற்கு முன்னால் ஒரு மிகப் பெரிய வாயு மேகம் ஒன்றில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று கணித்திருந்தார்கள்.

இன்று எல்லா அண்டவெளிகளிலும் இருக்கும் பிரமாண்டமான கரும்பள்ளங்கள் இதனைப் பற்றி ஆராய்ச்சிகளுக்கு புது வெளிச்சம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இப்போது அண்டவெளிகளின் தோற்றத்தில் இந்த பிரமாண்ட கரும்பள்ளங்களுக்கு இருக்கும் தொடர்பை ஆராயந்து வருகிறார்கள்.

இது பற்றி அறுதியிட்டு கூறும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகள் நம்மிடையே இல்லை.

இருப்பினும் draft நிலையில் இருக்கும் இந்த ஆராய்ச்சி எப்படி செல்கிறது என்றால்

ஒரு மிகப் பெரிய நட்சத்திரம் ஒரு மிகப் பெரிய வாயு மேகத்துடன் மோதினாலோ இல்லை வேறு நட்சத்திரங்களுடன் மோதும் சமயம் ஏற்படும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் ஒரு கரும்பள்ளமாக உருமாறி தன்னைச் சுற்றி இருக்கும் வாயுக்கள் நட்சத்திரங்கள் என்று எல்லாவற்றையும் இழுக்க ஆரம்பிக்கிறது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆரம்பிக்கும் கரும்பள்ளங்களைச் சுற்றி நட்சத்திர மண்டலங்கள் அப்படியே தோன்றி இன்று இருக்கும் அண்டவெளிகளாகி இருக்க வேண்டும் என்பது போல செல்கிறது.

இது இன்னும் ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை ஆனால் இது மிகச் சமீப கண்டுபிடிப்பு என்பதால் இது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.

பின் குறிப்பு

ஒரு சிறிய உதவி வேண்டி இந்தப் பின்குறிப்பு. இந்தப் பதிவைப் பல நாட்களாக எழுதி வருகிறேன். இன்னும் பல விஷயங்களை எழுதலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

ஆகவே சின்ன feedback வேண்டி இந்தப் பின்னூட்டம். இந்தப் பதிவு எப்படி செல்கிறது எப்படி செல்லலாம் என்பதைக் குறித்து எனக்கு தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

American Idol ஜட்ஜ் simon cowell போல Apprentice donald trump போல நேரடியாக முகத்தில் அடிப்பது போல நான் செய்து வரும் தவறுகளை, இன்னும் சிறப்பாக செய்யலாம், எதனைச் செய்யக் கூடாது என்று நீங்கள் கருதுவதை கூறினால் மிக உபயோகமாக இருக்கும். ஆகவே இந்த சின்ன உதவியை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Monday, January 15, 2007

அறிவியலும் ஆன்மீகமும் - 13

பிரம்மாண்டமான அற்புதமான கரும்பள்ளங்கள்(Super Massive Black Holes)

மனிதன் தான் எங்கிருந்து வந்தோம் இந்த பூமியில் எதற்காக பிறந்தோம் என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது என்று மதங்கள் கருதுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல அற்புதமான பிரமாண்டமான ஆச்சரியமான அமைப்புகளோடு ஒப்பிடுகையில், மனிதனின் வாழ்வு பற்றிய அறிதல் என்பது அற்பமாகி விடுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் அப்படி இருக்கும் ஒரு அற்புதமான ஒரு அமைப்பு அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே சொல்லப் முற்பட்டிருக்கிறேன். நான் எந்த அளவு அற்பமானவன் என்பதை இதனைப் பற்றி அறிந்ததால் உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்தலையும் சொல்ல இங்கே முற்பட்டிருக்கிறேன்.

மனித உடலில் எத்தனை செல்கள் இருக்கின்றன? 10 டிரில்லியன் அதாவது 1 லட்சம் பில்லியன் செல்கள்(1 million million cells ). இந்த பிரபஞ்சத்தில் எத்தனை அண்டவெளிகள் இருக்கின்றன? 125 பில்லியன் அண்டவெளிகள். சிலர் 500 பில்லியன் என்று சொல்கிறார்கள் சிலர் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். 125 பில்லியன் என்பது ஹீபிள் தொலைநோக்கி மூலமாக கணித்துள்ள எண். 125 பில்லியன் அண்டவெளிகள்!!!!!!!!!

நம் உடலில் இருக்கும் 800 செல்களைச் இணைத்துப் பார்க்க முயற்சித்தால் முடியாது அவை கண்களுக்கு தெரியாது. இந்த பிரபஞ்சத்தின் அண்ட வெளிகளையும் ஒப்பிட இந்தக் கணக்குதான் 800 செல்கள் நம் கண்களுக்கு எப்படித் தெரியாதோ இந்த பிரபஞ்சத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்தினால் அண்டவெளிகள் என்பது microscopic ஆக இருக்கும் அதாவது கண்களுக்குப் புலப்படாத ஒரு பொருளாக இருக்கும். ஒவ்வொரு அண்ட வெளியிலும் 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரமான சூரியன் 1 லட்சம் பூமியை உள் அடக்கி விடக் கூடியது. 6 பில்லியன் மக்களை உள்ளடக்கியது பூமி. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் ஒப்பீடுகள் இருக்கிறதா?

சரி இதற்கும் பிரமாண்டமான அற்புதமான கரும்பள்ளங்கள் என்ன சம்பந்தம்? ஏற்கனவே இங்கே சொல்லப்பட்டிருக்கும் கரும்பள்ளங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ன வித்தியாசம்?

முதலில் கரும்பள்ளங்களுக்கும் அற்புதமான பிரம்மாண்டமான கரும்பள்ளங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதைச் சொல்கிறேன். இவை இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் உள்ளன. மலை மடு என்பது உவமை மட்டும் அல்ல. அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் என்பது சூரியனை விட பல மில்லியன் மடங்கு உருவத்திலும் எடையிலும் பெரியது(1 மில்லியன் என்பது 100 கோடி என்று கொள்க). ஆனால் சாதாரண கரும்பள்ளங்கள் மிகச் சிறியவை பூமியின் சுற்றளவில் தொடங்கி சிறிய புள்ளி அளவு வரை இதன் அளவு வேறுபடும்.

வேறு சில வித்தியாசங்கள் என்னவென்றால் அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால் Event Horizon என்று சொல்லப் படும் அதனுடைய எல்லைகளில் புவியீர்ப்பு விசை(gravitational force) என்பது சாதாரண கரும் பள்ளங்கள் போல இருக்காது. மேலும் இந்த பிரம்மாண்டமான கரும்பள்ளங்களில் density(அதாவது பொருள்கள் ஒரு இடத்தில் அடங்கி இருக்கும் அளவு) என்பது மிகக் குறைவாகவே இருக்கும்.

சரி அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்களில் என்ன விஷேசம் இருக்கிறது ஏன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறார்கள்?

இதனைப் புரிந்து கொள்ள சில கேள்விகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேள்விகள் புரிந்தால் தான் பதில்கள் நமக்குத் தெரியும் சமயம் அதனைப் புரிந்து கொள்ள முடியும் இல்லையா :-)))).

சரி கேள்விகள். இந்தப் பிரபஞ்சம் பெருவெடிப்பில் தொடங்கி இன்று வரை விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்களே. இதில் அண்ட வெளிகள் எப்படித் தோன்றின? மிகச் சாதாரணமான கேள்விதான். ஆனால் இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? எப்படி இந்தப் பிரபஞ்சம் அதில் அண்டவெளிகள் அதில் நட்சத்திர மண்டலங்கள் அதனைச் சுற்றி கிரகங்கள் என்ற அமைப்பு உண்டாயிற்று? அண்ட வெளிகள் இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய மண்டலத்தில் பூமி இருப்பது போல இருக்கிறது. ஆக அவை ஒரு தனியான அமைப்பு இல்லையா? அது போன்ற அமைப்பு எப்படி உருவானது?

இதற்கு பதில் தெரிய அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் அண்டவெளிகள் தோற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்களுக்கும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இன்று இந்தப் பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது ஏன் வேறு மாதிரி இல்லை என்பது போன்ற கேள்விகளுக்கும் இந்த அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்களைப் பற்றிய முதலில் ஆராய ஆரம்பித்த போது இதன் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் ஆராய்ச்சியாளர்கள் உணரவில்லை. கரும்பள்ளங்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கற்பனையில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப் பட்டு வந்த காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் இவை கற்பனை அல்ல என்பதை நிரூபிக்கவும் தங்களுடைய பல விளக்கங்கள் உண்மைதான் என்பதை நிரூபிக்கவே இதனைப் பற்றி ஆராய ஆரம்பித்தார்கள்.

வெளிச்சத்தைக் கூட வெளியேற்ற விடாத இந்த அற்புதமான பிரமாண்ட கரும்பள்ளங்களை ஆராய்ச்சியாளர்கள் தேடியது இந்தப் பிரபஞ்சத்தின் மிகப் பிரகாசமான இடங்களில். அதாவது quasars எனப்படும் அண்டவெளிகளில். பிரபஞ்சத்திலேயே மிக அதிகமான வெளிச்சத்தை வெளியே உமிழும் அண்டவெளிகளை quasar என்று வகைப்படுத்துகிறார்கள். கீழே quasar அண்டவெளிகள் எப்படித் இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு ஒளிப்படமும், ஒரு அசையாப் படமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.





சாதாரண அண்டவெளிகளை விட பல மடங்கு வெளிச்சத்தை உமிழும் இந்த quasar அண்டவெளிகள் ஏன் பிரமாண்டமான கரும்பள்ளங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளைக் கவர்ந்தது? அதுவும் கரும்பள்ளங்கள் என்பது வெளிச்சத்தை கூட வெளியே விடாமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாயந்ததாக இருக்கும் போது?

காரணம் இந்த quasar அண்டவெளிகள் இந்த அளவு வெளிச்சத்தை உமிழக் காரணம் அந்த அண்டவெளிகளில் உள்ள நட்சத்திரங்களையும் எல்லாம் எதோ ஒரு சக்தி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் யூகித்தார்கள். அந்த சக்தி இழுத்துக் கொண்டிப்பதால் பல நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலும், அந்த ஈர்ப்பு சக்தியால் தன்னுடைய சக்தியை வெகு வேகமாக இழந்து super novaக்களாக வெடித்து சிதறிக் கொண்டிருப்பதாலும் தான் அவை இந்த அளவு பிரகாசமாக இருக்கிறது என்றும் கணித்தார்கள். இந்த அளவு சக்தி கொண்ட ஒரு அமைப்பு, பிரமாண்டமான ஒரு அமைப்பு, பல நட்சத்திரங்களை தன்னை நோக்கி இழுக்கும் சக்தி வாய்ந்த அமைப்பு பல நட்சத்திரங்களை வெடித்து சிதற வைக்கும் சக்தி கொண்ட அமைப்பு, இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்றால், அவை சிங்குலாரிட்டி(singularity) என்று சொல்லப்படும் பிரபஞ்சத் தொடக்க நிலையை ஒத்த நிலையை தன்னுள்ளே கொண்டிருக்கும் கரும் பள்ளங்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்தார்கள்.

அவர்களின் கணிப்பு தவறாகவில்லை.

ஆனால் இந்த ஆராய்ச்சிகள் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப் போகும் உண்மைகளை இந்த ஆராய்ச்சிகள் இந்த பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றிய மிகப் பெரிய உண்மைகளை விளக்கப் போகிறது என்பதை அவர்கள் அப்போது கணிக்கவில்லை.

மிக நீண்ட விளக்கமாக இருப்பதால் மீதி அடுத்த பகுதியில்.

Thursday, January 11, 2007

Stephen Hawking's Universe 02 -The Big Bang

Did the universe have a beginning? The Steady-State theory vs. The Big Bang, Albert Einstein, Georges Lemaître, Fred Hoyle, Arno Penzias and Robert Wilson, cosmic background radiation.