Friday, December 22, 2006

அறிவியலும் ஆன்மீகமும்-12 நட்சத்திரங்கள்

தலை உயர்த்தி வானில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் எத்தனை முறை ரசித்திருக்கிறேன் என்பது நினைவில்லை. நட்சத்திரங்களை இன்று எண்ணி விடலாம் நாளை எண்ணி விடலாம் என்று சின்ன வயதில் பல நாட்கள் கழித்ததுண்டு.

சிறு வயதில் மின்மினி பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கும், தோரணத்தில் கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் கலர் விளக்குகளுக்கும் அதிக வித்தியாசங்கள் தெரிந்ததில்லை.

இன்று தலை உயர்த்தி அதே நட்சத்திரங்களைப் பார்க்கும் சமயம் தான் எத்தனை விதமான உணர்வுகள். மனிதனின் கற்பனை எல்லையற்றது என்றால் அதன் எல்லையைக் கூட விஞ்சி விடும் பிரமாண்டம் மயக்கம் தருகிறது.

குமரியில் இருந்து காஷ்மீரம் வரையிலான தூரங்களே பிரமிக்க வைக்கும் பொழுது, இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்று மட்டுமே சொல்ல முடியும் என்பதை அறிவு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

சூரியனை விட அளவில் 100 மடங்கு பெரிய நட்சத்திரமான பிஸ்டல் நட்சத்திரம் சூரியனை விட 10 லட்சம் மடங்கு அதிகமான பிரகாசம் கொண்டது என்பதை கற்பனை கூட ஒப்புக் கொள்ள மறுக்கிறது. கடவுளை வர்ணிக்கும் கவிஞர்களின் கற்பனையில் கூட இவ்வளவு பிரகாசம் குறிப்பிடப் படுவதில்லை என்றே நினைக்கிறேன்.

எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் இருப்பதாக கொண்டிருந்த என் சிறு வயது எண்ணம் மட்டும் தவறாகி விடவில்லை. நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்கும்? எண்ணில் அடங்காது தானே?

உயிர்களின் ஜனனம் என்பது இயற்கையின் அற்புதம். நட்சத்திரங்களின் ஜனனமும் அதே போலத் தான். மனிதர்கள் போல கண்ணோடு கண் சேர்த்து, காதல் மொழி பேசி, கட்டி காமுற்று, கலவி செய்து குழந்தை பெறுவது போன்ற நிகழ்வுகள் இல்லை.

ஸ்டெல்லார் மேகங்கள்(stellar clouds) என்பதில் இருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகுகின்றன. இது உயிர்களின் தோற்றத்தோடு ஒப்பிடும் சமயம் விந்து அல்லது ஓவம் என்ற நிலை என்பதை அறியலாம் அதாவது தொடக்க நிலை இதுதான்.

ஸ்டெல்லார் மேகங்கள் என்றால் என்ன? மேகம் என்பது என்ன? நீராவி திரண்டு ஆகாயத்தில் ஒரே இடத்தில் இருக்கிறது அந்த நீராவி திரண்டு இருக்கும் இடத்தை நாம் மேகம் என்று சொல்கிறோம்(நீராவி ஏன் ஒரே இடத்தில் திரண்டு இருக்க வேண்டும்? மேகத்தில் மட்டும் இருக்கும் அந்த நீராவி ஏன் ஆகாயம் முழுக்க பரவுவதில்லை யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பதில் அளிக்க வேண்டுமெனில் ஒரு தனி பதிவு இட வேண்டும்.)

ஸ்டெல்லார் மேகங்கள் என்பது அண்டவெளியில் ஒரே இடத்தில் திரண்டு இருக்கும் கேஸ்கள். நம் நீர் மேகங்கள் சிறிய அளவில் இருப்பதால் ஸ்டெல்லார் மேகங்களும் இதே போல இருக்கும் என்று நினைத்து விடக் கூடாது. முன்பு குறிப்பிட்டுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தை விட பெரிய அளவில் கூட இருக்கும் இந்த ஸ்டெல்லார் மேகங்கள். இந்த ஸ்டெல்லார் மேகங்களிம் அதிக அளவில் இருப்பது ஹைட்ரஜனாக இருக்கும்.

காதலாகி கசிந்துருகினால் மட்டும் மனிதர்களுக்கு குழந்தை பிறந்து விடுமா இல்லையே? அதற்கு கலவி தேவையாயிருக்கிறது இல்லையா? ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதும் அதே போலத்தான்.

ஒரு ஸ்டெல்லார் மேகம் மற்றொன்றுடன் மோதும் சமயம் ஏற்படும் உராய்வு அல்லது நட்சத்திரங்களில் ஏற்படும் சூப்பர் நோவா உண்டாக்கும் வெப்பம் மற்றும் அதிர்வுகளாலேயே இந்த ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகுகிறது.

ஏதுவான சூழ்நிலை தான் உருவாகுகிறதே தவிர எல்லா ஸ்டெல்லார் மேகங்களும் நட்சத்திரங்களாக மாறுவதில்லை.

மேலே குறிப்பிட்டதில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தாலும் இந்த ஸ்டெல்லார் மேகங்களில் உண்டாகும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் இந்த ஸ்டெல்லார் மேகங்கள் ஒரு புரோட்டோ ஸ்டார்(proto star) என்ற நிலையை அடையும்.

இந்தப் பருவத்தை நம் குழந்தைப் பருவத்துடன் ஒப்பிடலாம். அதாவது வளரும் பருவம் இது. முழு நட்சத்திரமாக மாறுவதற்கு முந்தைய நிலை இது.

இப்படி ஆகும் ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாற அதனுடைய வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும்.

வெப்பம் அந்த அளவை நிலையை அடைந்த உடன் அணு சேர்க்கை(nuclear fusion) ஆரம்பமாகி விடும். அணு பிளவை(Nuclear Fission) விளக்கி பதிவை சீனு அவர்கள் எழுதி இருக்கும் பதிவை இங்கே காணலாம்.

சில ஸ்டெல்லார் மேகங்களில் இந்த அணு சேர்க்கை நடப்பதற்கு தேவையான வெப்ப அளவை அடைவதே இல்லை. இந்த ஸ்டெல்லார் மேகங்கள் பழுப்புக் குள்ளன் (Brown dwarf) ஆக மாறி விடும்.

இப்படி அணுசேர்க்கை ஆரம்பித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அந்த அணுசேர்க்கையின் காரணமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நாம் முழுக்க வளர்ந்த ஒரு மனிதனுடன் ஒப்பிடலாம். அதாவது நட்சத்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தில் பருவம் அடைந்து விட்டது என்று கூறலாம்.

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது என்பது போல எல்லா நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் அப்படியே இருந்து விட்டால் புதுப் புது நட்சத்திரங்கள் தோன்றத் தோன்ற பிரபஞ்சமே நட்சத்திரங்களால் நிறைந்து விடாதா?

மனிதர்களுக்கு மரணிப்பது போலவே நட்சத்திரங்களும் மரணிக்கின்றன.

ஏன் மரணிக்கிறது என்றால், நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கையின் போது என்ன நடக்கிறது என்றால் ஹைட்ரஜன் அணுக்களை எல்லாம் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. நம் உடலில் நடக்கும் செல் மரணங்கள், ஜனனங்களுடன் இதனை ஒப்பிடலாம். இந்த சேர்க்கையின் போது வெளியாகும் சக்திதான் வெப்பமாகவும், வெளிச்சமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணுக்கள் எதோ ஒரு சந்தர்பத்தில் தீர வேண்டும் அல்லவா? அப்படி தீரும் சமயம் இல்லை ஹீலியம் மிக அதிக அளவில் உற்பத்தியாகும் சமயம் இந்த அணுசேர்க்கையில் வெளியாகும் சக்தி போதுமானதாக இருப்பதில்லை.

அந்த சமயத்தில் இந்த நட்சத்திரம் மரணிக்க ஆரம்பிக்கிறது. புவியீர்ப்பு சக்தி(gravitational force) மெதுவாக இந்த நட்சத்திரத்தை சுருங்க செய்கிறது.

இதை லாடம் கட்டுவதுடன் ஒப்பிடலாம். ஒரு பொருளை சூடாக்கினால் அது விரிவடைகிறது. அதனை குளிர்வித்தால் அது சுருங்குகிறது அல்லவா? அதே போல மிக வெப்பமாக இருந்த நட்சத்திரம் அந்த வெப்பம் இப்பொழுது இல்லாததால் சுருங்க ஆரம்பிக்கிறது.

சூரியன் போல நடுத்தர அளவு நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் இதன் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக இல்லாததால் இதனை நம் பூமி அளவுக்கு சுருக்கி விடும். அப்படி சுருங்கிய சூரியன் தன் பிரகாசம் இழந்து வெப்பம் வெளியாக்கும் சக்தியை இழந்து ஒரு வெள்ளைக் குள்ளனாக(white dwarf) சுருங்கி விடும்.

சூரியனை விட சற்று பெரியதாக இருக்கும் நட்சத்திரங்களில் புவியீர்ப்பு விசை இன்னும் அதிகமாக இருப்பதால் இதனை மிக மிக அதிகமாக சுருக்கி ஒரு நியூட்டரான் ஸ்டார்(neutron star) ஆக மாறி விடும்.

சூரியனை விட பல மடங்கு பெரியதாக இருக்கும் நட்சத்திரங்கள் கரும் பள்ளங்களாகி விடும். இதனைப் பற்றி இங்கே எழுதப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் நட்சத்திரங்கள் மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மனிதர்கள் மதமென்னும் மாயப் பேயின் பிடியில் சிக்கி மன வக்கிரங்களை வெளிப்படுத்தி, மனதில் அயர்ச்சியை உண்டாக்கும் வேளைகளில் எல்லாம் வானில் தலை உயர்த்தி நட்சத்திரங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

1,00,000 ஆண்டுகள் மனிதர்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒரு நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு மிகச் சிறிய ஒரு பகுதியே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.

எத்தனை ஆற்றல் மிக்கது ஒரு நட்சத்திரம் எவ்வளவு வெப்பத்தை எவ்வளவு வெளிச்சத்தை எத்தனை எத்தனை கோடி ஆண்டுகளுக்கு வெளிப்படுத்துகிறது. அதற்கும் விதிகள் வைத்து அதனையும் மரணமுறுகிறது? என்ன அற்புதம் என்ன ஆற்றல்.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள் தான் எத்தனை அற்புதமானவை. எத்தனை சாகசங்களை இந்த பிரபஞ்சத்தில் வைத்திருக்கிறது இந்த ஆற்றல். மனிதர்கள் இந்த ஆற்றலை கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார்களே.

மதம் மூலம் மனிதன் தனக்குத் தேவையானதைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இந்த ஆற்றலின் அற்புதங்களை உணரும் அறிவு மனிதர்களுக்கு இருக்கிறது. இறை ஆற்றல் கோடிப் பாகங்கள் என்றால் அதில் ஒரு துளியை மனிதனின் அறிவு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த ஆற்றலின் அற்புதங்களை மதங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. மனிதர்களுக்கு தேவையானது இந்த ஆற்றலைத் தேடினால் கிடைக்கும் என்று தான் சொல்லிக் கொடுக்கிறது.

மனிதன் ஏன் புத்தகங்கள் பின்னும், கேடு கெட்ட புத்தியால் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட விதிகளுக்குப் பின்னாலும் சுற்றுகிறார்கள்?

அறிவிலிகளாக உன் ஆற்றலை உணராமல் ஏன் வாழ்க்கையை கோயில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் வீணடிக்கிறார்கள். தலையை உயர்த்தி வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களில் நீ நிகழ்த்தும் அற்புதங்கள் பார்த்தால் போதுமே உன் அற்புதங்கள், ஆற்றல் எல்லோருக்கும் விளங்குமே.

இறை ஆற்றலை என் மார்க்கத்தின் மூலமாக மட்டுமே உணர முடியும் என்று நினைக்கும் மூட மதியே,

எல்லா மனிதர்களுக்கு மட்டும் இல்லை இந்த பிரபஞ்சத்திற்கே இறை ஆற்றல் ஒன்றுதான் .

பெயரிடாதே சொந்தம் கொண்டாடாதே மனிதா நான் பெயர்களுக்கும், மனிதர்களுக்கும் அப்பாற்பட்டவன் என்றும்

உன் மூட மதி வாழ்வில் நீ என்னை எப்படி வணங்குகிறாய் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. உன் வணக்கங்களுக்காகவா என் ஆற்றல் இருக்கிறது என் ஆற்றலுக்கு முன் நீ ஒரு அணு கூட இல்லை என்றும்

இந்த பூமியில் வாழும் சமயத்தில் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தாலே போதும் என்றும்

நீ நட்சத்திரங்களை காண்பித்து சொல்லும் செய்தி எல்லோருக்கும் எப்போது புரியப் போகிறது???

கீழே நட்சத்திரங்களிம் தோற்றமும் எப்படி மரணிக்கிறது என்பதைப் பற்றியும் ஒரு சிறிய வீடியோ.

15 comments:

கோவி.கண்ணன் [GK] said...

வாவ் ... விரிவான பதிவு ஆழமான கருத்துக்கள். இந்த இடுகை உங்கள் பதிவில் ஒரு வைர நட்சத்திரம் !

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த பதிவு.

பாராட்டுக்கள் குமரன்.

Anonymous said...

ஒளிப்படம் நன்றாக இருந்தது..

//நட்சத்திரம் சூரியனை விட 10 லட்சம் மடங்கு அதிகமான பிரகாசம் கொண்டது என்பதை கற்பனை கூட ஒப்புக் கொள்ள மறுக்கிறது. கடவுளை வர்ணிக்கும் கவிஞர்களின் கற்பனையில் கூட இவ்வளவு பிரகாசம் குறிப்பிடப் படுவதில்லை என்றே நினைக்கிறேன்//
ஆயிரம் சூரியப் பிரகாசம் என்கிற விதத்தில் பாடல்கள் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் பத்து லட்சம் சூரியர்களை யாரும் சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை :)

Thekkikattan|தெகா said...

குமரன்,

நல்ல அருமையாக வந்திருக்கிறது கட்டுரை. கடைசிப் பத்திகள் நச், நச்... நச்.

வானத்தை அன்னாந்து பாத்து நம்மின் உயரத்தை அளவீட அவ்வப் பொழுது கற்றுக் கொண்டாலே, பாதிப் பிரட்சினைகள் இங்கே இராது.

தொடர்ந்து உங்களின் பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

Anonymous said...

செந்தில்

நல்ல பதிவு.

தகடூர் கோபி(Gopi) said...

அருமையான பதிவு

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வழக்கம் போல முதலில் வந்த கோவி நன்றி.

பொன்ஸ் நன்றி

நன்றி Thekkikattan. நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு ஒரு பூஸ்ட்

நன்றி நிர்மல்.

கோபி மிக்க நன்றி. சத்தமில்லாம பல தமிழ் சேவை புரிந்து வரும் நீங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சி.

தகடூர் கோபி(Gopi) said...

குமரன்,

என் போன்றோர் வெளியிடும் தொழில்நுட்ப பணிகள் எல்லாம் வெறும் கருவிகள்... காலத்தால் (புதிய நுட்பம் வரும்போது) பயனற்றுப் போகக் கூடியன.

இது போன்ற அறிவியல் விழிப்புனர்வு பதிப்புகள் தான் தமிழுக்கு சிறப்பு சேர்ப்பவை. என்றும் பயனுள்ளவை. தனியே தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியவை. உண்மையில் சத்தமில்லாமல் சாதனை செய்து கொண்டிருப்பது நீங்கள் தான் :-)

ஓகை said...

சிறந்த பதிவு.

கோடி சூர்யப் பிரகாசம் என்பது எழுத்தாளர்களால் கையாளப்படுகிற ஒன்றுதான். நானே உபயோகித்திருக்கிறேன். சில பேரிடம் இதைச் சொல்லி அவர்களை மேலும் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்கள் சிலர்.

அண்டாரஸ் என்னும் நட்சத்திரம் ரொம்பப் பெரியது என்றார்கள். எவ்வளவு பெரியது என்றால் நமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்குப் பதிலாக அதை வைத்தால் அதன் மேற்பரப்பு செவ்வாய் கிரகத்தின் சூர்ய சுற்றுப்பாதையையும் தாண்டி இருக்குமாம். இதைப் படித்தவுடன் ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.

//மதம் மூலம் மனிதன் தனக்குத் தேவையானதைத் தேடிக் கொண்டிருக்கிறான்//

உண்மைதான். பாவம் அவனும்தான் என்ன செய்வான்? அவன் பொறியாள்(robot) இல்லையே! அவனுக்கு பலதும் தேவைப்படுகிறதே!!

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் சொன்னதை அப்படியே சொல்லுக்குச் சொல் நானும் சொல்கிறேன் செந்தில் குமரன். இந்தப் பதிவில் உங்கள் எண்ணங்களை நிறுத்தி நிதானமாக மிகத் தெளிவாக தொடர்ச்சியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சொன்ன விதமும் இந்தப் பதிவில் மிக நன்றாக வந்திருக்கிறது. பொறுமையாக எழுதிய இந்தப் பதிவு ஒரே மூச்சில் படித்து விடும்படி சுவாரசியமாகவும் இருக்கிறது.

ஒளிப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதனைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

குமரன் (Kumaran) said...

ஒளிப்படத்தையும் பார்த்தேன் செந்தில் குமரன். மிக எளிமையாக இருக்கிறது உங்கள் பதிவைப் படித்தபின்னால். :-) உங்கள் தயவால் இந்த மாதிரி அறிவியல் ஒளிப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. இன்று என் மகளுக்குக் கதை சொல்லும் போது இந்த படத்தைக் காட்டிக் கதை சொல்ல முயல்கிறேன். :-)

ஓகை ஐயா சொன்னது போல் கோடி சூரியன்; அனந்த கோடி சூரியன் (எண்ணற்ற கோடி சூரியன்) என்றெல்லாம் இறைவனின் பிரகாசத்தை வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் சொல்லோடே நின்று விடும் படிப்பவர்களுக்கு; யாராலும் அதனை சிந்தித்துப் பார்கக் முடியுமா என்று தெரியவில்லை.

சீனு said...

//110 மடங்கு பெரிய சுற்றளவும்//
80+ என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...

//காதலாகி கசிந்துருகினால் மட்டும் மனிதர்களுக்கு குழந்தை பிறந்து விடுமா இல்லையே? அதற்கு கலவி தேவையாயிருக்கிறது இல்லையா? ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதும் அதே போலத்தான்.//
அருமையான உவமை.

//வெப்பம் அந்த அளவை நிலையை அடைந்த உடன் அணு சேர்க்கை(nuclear fusion) ஆரம்பமாகி விடும். இதனை விளக்கி சீனு அவர்கள் எழுதி இருக்கும் பதிவை இங்கே காணலாம்.//
தல. நான் எழுதியது அணுப்பிளவு. அணுச்சேர்க்கை அல்ல. திருத்தி விடவும்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கோபி தன்னடக்கம் ஜாஸ்தி உங்களுக்கு. பல இடங்களில் இருந்து காப்பி அடித்து எழுதுவது பெரிய விஷயமே இல்லை.

ஓகை சார் வருகைக்கு நன்றி. தகவல்களுக்கும் நன்றி. உண்மையிலேயே பிரமிப்பாக தான் இருக்கிறது.

குமரன் தொடர்ச்சியாக நீங்கள் தந்து கொண்டிருக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் வருகை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

சீனு திருத்தி விட்டேன். வருகைக்கு நன்றி. விக்கிப்பீடியாவில் 110ன்னு போட்டிருக்காங்க அதைத்தான் போட்டிருக்கேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

திருமா வாங்க. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. உங்களாலதானே இன்னைக்கு பிளாக் எழுதீட்டு இருக்கேன்.

முன்னாடியே கோபி சுட்டிக்காட்டிய விஷயம் தான் இது. ஆனா ஈர்ப்பு விசைன்னா attractive force அப்படீன்னுதான் தோணுது gravityன்னு அர்த்தம் வர மாட்டேங்குது அதுதான் புவி ஈர்ப்புன்னே உபயோகப்படுத்தீட்டு இருக்கேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சூரியனை விட 40 மில்லியன் மடங்கு அதிக பிரகாசமுள்ள நட்சத்திரத்தை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அதாவது 4 கோடி மடங்கு அதிகப் பிரகாசம்.

http://www.spaceref.com/news/viewpr.html?pid=13334

http://en.wikipedia.org/wiki/LBV_1806-20

தகடூர் கோபி(Gopi) said...

அட.. தன்னடக்கமெல்லாம் இல்லீங்க. நிஜமாவே "தகவல் (Information)" என்பது "தொழில்நுட்பத்தை(Technology)" விட என்றைக்குமே மிக மிகப் பெரிது.

நீங்க தகவலை தமிழ்ப்படுத்துறீங்க நான் தொழில்நுட்பத்தில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்க உழைக்கிறேன். அதனாலதான் நான் செய்றதவிட நீங்க செய்றது பெருசுன்னு சொன்னேன்.

சரி சரி.. நாம இதை நிறுத்திக்கலாம்... :-) இல்லைன்ன ஒரு குரூப் "தன்னைத் தானே ந... கொள்ளும் ..."ன்னு பாட ஆரம்பிச்சிருவாங்க.