Thursday, November 02, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 9

Free Image Hosting at www.ImageShack.us

Black Holes(கரும் பள்ளங்கள்) சில வருடங்களுக்கு முன் வெறும் இருக்கலாம் இருக்கக் கூடும் என்றும் சிங்குலாரிட்டி என்ற பிரபஞ்சத் தோற்றத்தின் தொடக்கத்தில் இன்றைய இயற்பியல் விதிகளால் விளக்க முடியாத சில விஷயங்களை விளக்குவதற்காக இயற்பியல் விஞ்ஞானிகளால் தோற்றுவிக்கப் பட்ட ஒன்றாகவே கருதப் பட்டது.

ஆனால் இங்கே மேலே கொடுக்கப் பட்டிருப்பது நாம் இருக்கும் அண்டவெளியான பால் வீதியின் நடுவில் இருக்கும் ஒரு கரும் பள்ளம்(Black Hole). இது மிக சமீபத்திய கண்டுபிடிப்பாகும்.

கரும் பள்ளங்கள் என்பது ஏன் உலகியல்(cosmology) துறையில் ஆர்வமாகவும் முக்கியமானதாக கருதப் படுகிறது என்றால் மீண்டும் சிங்குலாரிட்டியோடு கரும் பள்ளங்களுக்கு இருக்கும் தொடர்பை அறிந்து கொண்டால் தான் முடியும்.

முதலில் கரும் பள்ளங்கள் என்றால் என்ன?

நாம் வானில் காணும் நட்சத்திரங்களில் இருந்து ஒளியும் வெப்பமும் எப்படி வெளிபடுகிறது. நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணு மற்றொரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைந்து ஹீலியம் அணுவாக மாறும் சமயம் ஒளியும் வெப்பமும் வெளிப்படுகிறது. இதனை அணு சேர்க்கை(fusion - உருக்கு) என்று அழைப்பார்கள்.

இது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. எல்லா தொடக்கத்திற்கும் ஒரு முடிவு வேண்டும் அல்லவா? அந்த நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் எல்லாம் தீர்ந்து போய் விட்டால் என்னவாகும்? நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் வெப்பம் இல்லாத ஒரு இடம் சுருங்குவது போல மெதுவாக அதனுடைய சுற்றளவு குறைந்து கொண்டே வந்து அது ஒரு வெள்ளைக் குள்ளன்(White Dwarf) என்ற மிகச் சிறிய அளவாகி விடும்.

இது நம் சூரியனுக்கும் பொருந்தும். சுமார் ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து நம் சூரியனும் ஒரு வெள்ளைக் குள்ளனாக மாறி விடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

ஆனால் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் அதனுடைய எரி பொருள் தீர்ந்து போகும் சமயம் இவை வெள்ளைக் குள்ளாகாமல் கரும் பள்ளங்களாகி விடுகின்றன.

இது எப்படி நடக்கிறது என்றால் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரத்தில் அதனுடைய எரி பொருளான ஹைட்ரஜன் தீர்ந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த நட்சத்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி அதனுடைய சுற்றளவு குறைந்து கொண்டே வரும். இது போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களின் புவியீர்ப்பு விசை( பூமியில் உள்ளது தான் புவியீர்ப்பு விசை gravity என்பது ஈர்ப்பு விசைதான் ஆனால் புவியீர்ப்பு விசை என்பது கொஞ்சம் புரியும் படி இருப்பதால் அதே வார்த்தை உபயோகப் படுத்தப் படுகிறது இங்கு புவியீர்ப்பு என்பது gravity என்று அறிந்து கொள்ளுங்கள்) என்பது மிக அதிகமாக இருக்கும். ஆகவே இது சுருங்கிக் கொண்டே வர அதன் மையத்தில் இருக்கும் புவியீர்ப்பு விசை அதிகரித்துக் கொண்டே வரும். ஒரு சமயத்தில் அதனுடைய புவியீர்ப்பு விசை என்பது மிக அதிகமாகி வெளிச்சத்தின் வேகத்தில் கூட வெளியே செல்ல இயலாத அளவுக்கு அதனுடைய புவியீர்ப்பு விசை அதிகரித்து விடும்.

இதனை ஒரு மிக எளிமையான ஒரு உதாரணத்துடன் விளக்க வேண்டும் என்றால் நாம் இந்த பூமியில் ஒட்டிக் கொண்டு இருப்பது புவியீர்ப்பு விசையால் தான். சந்திரனில் ஏன் மிதக்கிறோம் என்றால் அங்கு புவியீர்ப்பு விசை என்பது குறைவாக இருப்பதால். நாம் இருந்து ஒரு கல்லை மேலே விட்டு எறிந்தால் என்னாவாகிறது அது சற்று தூரம் சென்று திரும்பி வந்து விடுகிறது. அதே கல்லை சந்திரனில் அதே அளவு சக்தியுடன் தூக்கி எறிந்தால் என்னவாகும் அது இங்கே எந்த அளவு மேலே சென்றதோ அதனை விட கொஞ்சம் அதிக தூரம் மேலே சென்று திரும்பி வந்து விடும்.

ஒரு துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டால் என்னவாகும் அது கல்லை விட அதிக தூரம் மேலே செல்லும் ஆனால் திரும்பி வந்து விடும். ஆக வேகம் அதிகரிக்க அதிகரிக்க மேலே மேலே செல்ல முடிகிறது இல்லையா? ஆக ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தில் சென்றால் நாம் இந்த பூமியின் ஆகாய மண்டலத்தை(atmosphere) தாண்டி சென்று விட முடியும். இந்த வேகம் பூமியில் அதிகமாக இருக்கும் சந்திரனில் கம்மியாக இருக்கும் புவியீர்ப்பு விசை வேறுபாட்டால். இந்த வேகத்தை escape velocity என்று அழைப்பார்கள்.

இப்பொழுது மெதுவாக இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தில் அதன் சுற்றளவு குறைவதால் புவியீர்ப்பு விசை அதிகமாகிக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அந்த புவியீர்ப்பு விசையில் வெளிச்சத்தின் வேகத்தில் ஒரு பொருள் வெளியேறினால் கூட வெளியேற முடியாத அளவு புவியீர்ப்பு விசை அதிகரித்திருக்கும்.

மேலும் நமக்கு வெளிச்சத்தை விட எந்த ஒரு பொருளும் வேகமாக பயணிக்க முடியாது என்று தெரியும் என்பதால் வெப்பம் வெளிச்சம் என்று எதுவுமே வெளியேற முடியாத நிலையில் அது ஒரு கரும் பள்ளம் ஆகி விடுகிறது.

ஏன் கரும் பள்ளம் என்றால் அதனை யாருமே பார்க்க இயலாது என்பதால் தான். ஒரு பொருளை நாம் காண வேண்டும் என்றால் அதில் இருந்து வெளிச்சம் வெளியாக வேண்டும் அல்லது வெளிச்சம் அதிலிருந்து பிரதிபலிக்க(reflect) வேண்டும். ஆனால் இந்த கரும் பள்ளத்திலிருந்து வெளிச்சம் வெளியாக முடியாதது மட்டும் அல்ல. அதன் மேல் படிந்த வெளிச்சம் கூட அதில் இருந்து வெளிப்படாது இல்லை பிரதிபலிக்காது.

ஏன் இந்த கரும் பள்ளங்கள் இவ்வளவு ஆர்வத்துடன் விஞ்ஞானிகளால் ஆராயப் படுகிறது என்றால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தின் போது இருந்த ஒரு சூழ்நிலை இந்தப் பிரபஞ்சத்திலேயே கரும் பள்ளங்களில் மட்டுமே தென்படும் அது போன்ற சூழ்நிலைகள் இருக்கும்.

கரும் பள்ளங்களின் ஹாகின்ஸ் அவர்களின் ஆராய்ச்சி இதன் மேல் மிகப் பெரிய ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. சில ஆராய்ச்சியாளர்கள் நம் பிரபஞ்சமே ஒரு பெரிய கரும் பள்ளத்திற்குள் இருப்பதாக கூட நினைத்தார்கள். அந்த அளவு இது நம்முடைய பிரபஞ்சத் தோற்றத்துடன் சம்பந்தம் இருக்கிறது.

எப்படி சம்பந்தம் இருக்கிறது எந்த அளவில் இருக்கிறது என்பதெல்லாம் மிக விஞ்ஞானப் பூர்வமாகி விடும்.

ஆனால் நம் பால் வெளியின் நடுவில் ஒரு கரும் பள்ளம் இருக்கிறது என்பதும் எல்லா அண்ட வெளிகளுக்கு(galaxy) நடுவிலும் ஒரு கரும் பள்ளம் இருக்கலாம் என்பதும் இதனுடைய முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.

ஒரு வகையில் ஆன்மீகமும் ஒரு கால கட்டத்தில் அறிவியல் விளக்க முயன்ற சில விஷயங்களை விளக்க முயற்சித்திருக்கிறது. பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத் தோற்றம் போன்றவைகளை கடவுள் தோற்றுவித்தார் என்றும் எப்படி தோற்றுவித்தார் என்றும் விளக்கி இருக்கிறது.

எல்லா மதங்களிலும் இது போன்ற விளக்கங்கள் உண்டு. மனிதன் அறிவுக்கு எட்டாததை விளக்க எப்பொழுதுமே மதங்கள் விளக்க முயற்சித்திருக்கிறது. அந்த விளக்கங்கள் எல்லாமே நம் கண்களுக்கு தெரிந்தது, சூரியன் நட்சத்திரங்கள் இவற்றை மட்டுமே விளக்க முயற்சித்திருக்கிறது.

பதில் தெரியாத கேள்விகள் எழுந்த சமயங்களில் எல்லாம் கடவுளின் வேலை மனிதனின் அறிவுக்கு எட்டாது என்று மூடி மறைக்கவே முயன்றிருக்கிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சி நம் அறிவை அதிகரித்திருக்கிறது பிரபஞ்சத் தோற்றம் என்பது 6 நாட்களில் ஏற்படவில்லை. இது பல காலம் எடுத்திருக்கிறது என்பதை நமக்கு சொல்கிறது. கடவுள் இல்லை என்று அறிவியல் விளக்கவில்லை(இது வரை இல்லை ;-))). ஆனால் மனிதனின் கேள்விகளுக்கு பதிலளிக்கவே முயற்சிக்கிறது. பதில் தெரியாத கேள்விகளுக்கு கடவுள் பின்னால் சென்று ஓடி ஒளிந்து கொள்ளாமல் தெரியவில்லை என்று நேர்மையாகவும், இன்னும் முழுமையாக உணர கடவுள் வழி காட்டவில்லை என்று கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு இருக்கிறது.

இது எனக்குத் தான் எல்லாம் தெரியும் நான் சொல்வதை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்ற அகங்கார மதங்களை விட நன்மையானதாகவே தோன்றுகிறது.