Tuesday, January 23, 2007

அறிவியலும் ஆன்மீகமும் - 15

ஏகாந்த இரவில் தலை சாய்த்து ஓய்வெடுத்து எங்கிருந்தோ கசிந்து வரும் இசையை ரசித்துக் கொண்டு மனதில் இனிமையான விஷயங்களை அசை போடும் தருணங்கள் மிக குறைவு என்றாலும் இயந்திரமாகி விட்ட என்னை மனிதனாக மீண்டும் உருப்பெறச் செய்யும் தருணங்கள் அவை.

இது போன்ற தருணங்களில் மனம் வேண்டுது மிக சிலவற்றையே மார்பில் சாய்ந்து கொள்ள என்னவள், சிரிப்பை பகிர நண்பன், வானில் வட்ட நிலவு.

நாணம் தலை தூக்கி மேகத்தின் பின் சென்று மறையவில்லை நிலவு என்றால் இவ்வுலகில் எழுதப்பட்ட எழுதப்படப் போகும் கவிதைகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து போய் இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

நிலவு கவிஞர்களோட கற்பனைக்கு மட்டும் இல்ல அறிவியல் அறிஞர்களோட ஆராய்ச்சிக்கு பல வகையில் உதவுது. இந்த பூமிக்கு மனிதனுக்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய ஆபத்து எதனால் என்றால் அது விண்கற்கள்(asteroids) மற்றும் வால் நட்சத்திரங்களினால்(comets) தான்.

இந்த விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்குத் தான் நிலவு உதவுகிறது. எப்படி? பூமியில் ஒரு விண்கல் வந்து விழுந்து ஒரு பள்ளம் ஏற்படுகிறது, அந்த பள்ளம் சில காலம் வரைக்கும் இருக்கும் ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளம் வந்து காற்று கொண்டு வந்து சேர்க்கும் தூசியால் மறைந்து விடும். ஆனால் நிலவில் காற்றும் கிடையாது தூசியும் நிரப்பாது அதனால் பல கோடி வருடங்களுக்கு முன்னால் விண்கற்களால் ஏற்பட்ட பள்ளம் கூட அப்படியே இருக்கும். இந்தப் பள்ளங்கள் விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திர ஆராய்ச்சிக்கு பல வகையில் உதவுகிறது.

விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் என்ன வித்தியாசம்?. விண்கற்கள் சூரியனை சுற்றி வரும் கற்கள் அவ்வளவே. விண்கற்களின் அளவு சில அடியில் இருந்து பல மைல்கள் வரை இருக்கும்.

வால் நட்சத்திரம் பல விண்கற்கள் மற்றும் உறைந்து போன தண்ணீர் அமோனியா போன்றவைகளின் கலவை. இவற்றை ஈர்ப்பு விசை ஒன்று பிணைத்துக் கொண்டிருக்கும். இந்த வால் நட்சத்திரங்களின் வால் பகுதி என்பது சூரியன் நெருங்கிச் செல்லும் சமயம் சூடாகி வெளியாகும் வாயுக்கள் தான்.

இந்த விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஏன் முக்கியமாக கருதப்படுகிறது என்றால் நம் நட்சத்திர மண்டலம் உருவாகும் சமயம் கிரகங்கள் உருவானது இது போன்ற பொருள்களில் இருந்து தான் என்றும் கிரகங்கள் உருவாகும் சமயம் எஞ்சிப் போனவைதான் விண்கற்களாகவும், வால் நட்சத்திரங்களாகவும் உருவாகுகிறது என்றும் சொல்லப் படுகிறது.

1994ல் Levy 9 என்ற வால் நட்சத்திரம் ஜூபிடர் கிரகத்துடன் மோதியது. அந்த வால் நட்சத்திரத்தின் முதல் பகுதி மோதிய சமயம் எழுந்த புகை மற்றும் தூசி மண்டலம் 1000 கி.மீக்கு மேலே வரை எழுந்தது. இரண்டாம் முதல் ஆறாம் பகுதி மோதிய போதும் அதே போல தான் நடந்தது. ஏழாம் பகுதி மோதிய சமயம் 3000 கி.மீ. வரை புகை மண்டலம் எழுந்தது.

பூமியில் இருந்து சரியாக பார்க்க முடியாத ஒரு கோணத்தில் இந்த மோதல் நடந்தது. ஆகவே இந்த மோதலைப் பற்றிய விவரங்கள் சரியான விவரங்கள் கிடைக்காது என்று நினைத்திருந்த விஞ்ஞானிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெரிய அளவில் மோதலின் அளவுகோல் இருந்ததால் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த மோதலில் சில பகுதிகள் ஜுபிடரில் பூமியின் சுற்றளவுக்கு நிகரான பெரிய பள்ளங்களை ஏற்படுத்தியது, சில பூமியின் சுற்றளவுக்கு பாதி அளவில் பள்ளங்களை ஏற்படுத்தியது.

இந்த வால் நட்சத்திரம் பூமியில் விழுந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று கேட்டால் சரியான முறையில் பதிலளிப்பது கடினம் இருப்பினும் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை.

சரி இது போன்ற நிகழ்வுகள் நிகழ வாய்ப்பு உண்டா எனில் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஜீபிடர் என்பது பூமியை விட பல மடங்கு பெரிய கிரகம் அதனால் அதனுடைய ஈர்ப்பு விசையால் வால் நட்சத்திரங்களும் விண்கற்களும் ஈர்க்கப் படும் வாய்ப்புகள் அதிகம் ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையாலும் இது போன்ற விண்கற்கள் ஈர்க்கப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் உண்மை.

மனிதன் மதங்களின் பேராலும் சித்தாந்தங்களின் பேராலும் இன்னும் என்னென்ன பிரிவினைகளை வளர்த்துக் கொள்ள முடியுமோ அத்தனை பிரிவினைகளின் பெயராலும் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறான். பிரபஞ்சத்தில் தன்னை தனக்குத் தெரிந்த அளவு யாருக்கும் தெரியாது என்று அகம்பாவம் கொண்டிருக்கிறான் மனிதன். தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதுதான் உண்மை என்ற அறியாமையில் இருக்கிறான் மனிதன்.

வானை பார்க்கும் திறன் கொண்ட மனிதனுக்கு என்ன பார்க்கிறான் என்று புரியாததால் குருடனாகவே இருக்கிறான். அகக்கண் திறக்க முயற்சி செய்யும் மனிதன் தன் புறக்கண்ணால் பார்க்கும் விஷயங்களை அறிந்து கொண்டாலே போதும் இந்த பிரபஞ்சத்தில் அவன் அறிந்து வைத்திருக்கும் இறைவனை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதை அறிந்து கொள்வான்.

மனிதன் என்பவன் அற்பமான கண்ணுக்கு புலப்படாத ஒரு கிருமி இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் சமயம். தனக்குத் தெரிந்தது தான் எல்லாமே என்ற அகந்தையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் மனிதன் கண்ணைத் இருந்தும் குருடனாக இல்லாமல் அற்பமான இந்த வாழ்வில் அமைதியாக காலத்தை கழிக்க முயற்சி செய்ய வேண்டும்.

No comments: