Wednesday, February 27, 2008

சுஜாதா

அறிவியல் மீது ஒரு விதமான ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுத்து இதனைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தை என்னுள் உருவாக்கியது சுஜாதாவின் ஏன்? எதற்கு எப்படி? நூல்தான். புத்தகத்தின் பெயர் சரியாக குறிப்பிட்டிருக்கிறேனா என்று தெரியவில்லை ஆனால் அந்த புத்தகத்தைப் பற்றி இன்னும் நினைவிருப்பது சூப்பர் நோவா குறித்து அதில் எழுதி இருந்தது தான். ஒரு நட்சத்திரம் வெடித்து சிதறுவதன் மூலம் கோடானு கோடி சூரியன்களின் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் விட அதிகமான வெப்பமும், வெளிச்சமும் வெளியாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. அதனைப் பற்றி இப்போது எத்தனையோ முறை படித்தாலும், அதனைப் பற்றிய விளக்கங்களை, ஏன் அதனை வீடியோவாக பார்த்திருந்த போதிலும் அதனைப் பற்றி முதன் முதலாக படித்தது நெஞ்சில் பசுமையாக பதிந்திருக்கிறது.

அவருடைய இன்னொரு நாவல் பெயர் தெரியவில்லை அதில் எதிர்காலத்தில் இருந்து ஒரு மனிதன் வந்து நிகழ்காலத்தில் அவனுடைய முன்னோராகிய ஒருவரை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற கதை. எதிர் காலத்தில் இவர் சென்ற பின் பல பிரச்சனைகள் உருவாகும் அதற்கெல்லாம் காரணம் இந்த நிகழ்காலத்து முன்னோரின் கற்பனை என்பது போல அமைந்திருக்கும் அந்தக் கதை. சிறு வயதில் இதனைப் படித்து பிரமிப்புடன் சுற்றிய காலம் உண்டு.

என் இனிய இயந்திரா டீவி பற்றி தெரிய வந்த நாட்களில் தொடராக வந்ததாக ஞாபகம் அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து படித்த காலம் உண்டு.

கணேஷ் வசந்த் இதுவும் டீவி மூலமாகத் தான் அறிமுகமானார்கள். ஒய்.ஜீ. மகேந்திரன் வசந்தாக நடித்ததாக ஞாபகம். இதனைப் பற்றியும் சிறு வயதில் எனக்கு ஒரு Fascination இருந்தது.

பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களை தாண்டி வளர்ந்து விட்டாலும் சுஜாதா அவர்கள் என்னுடைய படிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு காரணி இருந்தார் என்பது உண்மை.

No comments: