கடவுள், சாமி, இறைவன் இவர்களைப் பற்றிய நம்பிக்கைகளின் வாழ்க்கையில் மாறிக் கொண்டே இருக்கும் ஒன்று. அவன் இன்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையில் இருந்து இன்று Fundamental forces இன்றி அணு கூட இருக்காது என்ற Fact வரை பல மாற்றங்கள். இந்த மாற்றங்கள் அறிவியல் துணை கொண்டு எப்படி மாறியது என்பது தான் இந்தப் பார்வை.
சின்ன வயதில் கையைக் குவித்து இது தான் சாமி இதைக் கும்பிட்டால் நல்லாப் படிப்பு வரும் என்று எனக்கு மட்டுமில்லை பலருக்கும் ஆன்மீகத்தின் அறிமுகம் தங்களுடைய தாயாரின் மூலமே கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். சாமின்னா என்ன என்ற கேள்வியை முதன் முதலில் சொல்லிக் கொடுக்கும் கேட்டேனா என்று தெரியவில்லை. எப்பொழுது கேட்டேன் என்றும் ஞாபகம் இல்லை. ஆனால் வளர வளர புராணக் கதைகள் மூலமாக பல வேறு கடவுள்கள் அறிமுகமானார்கள். பிரம்மா படைப்புக் கடவுள், விஷ்ணு காத்தல், சிவன் அழித்தல் இவைதான் இவர்களது தொழில். இதில் விஷ்ணுதான் கூலான கடவுள், ராமாயணம் டீவியில் வந்ததால் இருக்கலாம் இல்லை ராமர், கிருஷ்ணர் என்று மனிதப் பிறவி எடுத்ததால் இருக்கலாம் ஏனென்று தெரியவில்லை.
இந்த காலகட்டத்தில் இறைவன் என்பவர்தான் எல்லாம். உலகில் நடைபெறும் அனைத்திற்கும் காரணம் கடவுள்தான் என்பது தான் நம்பிக்கையாக இருந்தது.
பின் கொஞ்சம் கொஞ்சமாக வேற்று மதக் கடவுள்களும் அறிமுகமானார்கள். இயேசு, அல்லா என்று அவர்களைப் பற்றியும் தெரிய வந்தது. கிறிஸ்து என்பவர் இந்த உலகில் வலம் வந்தவர் இறைவனின் புதல்வர் மனிதர்களுக்காக பல துன்பங்களைத் தாங்கியவர் என்றெல்லாம் அறிய முடிந்தது.
சிறு வயதில் எங்கள் பள்ளியில் மாரல் ஸ்டடீஸ் என்ற ஒரு பாடம் உண்டு அதில் ஒரு படம் ஒன்று வரைந்திருப்பார்கள் பல நதிகள் ஒரே கடலில் சென்று கலப்பதைப் போல காட்டி இருப்பார்கள். அதில் ஒவ்வொரு நதிக்கும் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று பெயர் சூட்டி கடலுக்கு GOD என்றும் பெயர் சூட்டி இருப்பார்கள். என் மனதில் அந்தப் படம் அப்படியே பதிந்து விட்டது.
சிறு வயதில் எல்லா மதத்தவரும் அதே போலத் தான் எண்ணி இருப்பார்கள் என்று நினைத்திருந்த சமயம் உண்டு.
ஆனால் நாளாக நாளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முஸ்லீம் கலவரம். கிறிஸ்துவர்கள் ஊர்வலத்தில் இந்துக் கலவரம் என்று செய்திகள் கேட்டு கொஞ்சம் குழம்பிப் போனதுண்டு.
பின்பு தான் அறிவியல் உலகம் என்பது அறிமுகமானது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் போன்ற அறிவியல் பாடங்கள் அது எப்படி நடந்திருக்கலாம் என்று விளக்கிச் சொன்னது வேறு விதமான சில நம்பிக்கைகளை தூண்டி விட்டது.
அறிவியல் என்பது நேர்மையானதாக தோன்றத் துவங்கியது. வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியல் என்பது இயங்கவில்லை என்பதும் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்களை என் அறிவுக்கு புரியும் வகையில் விளக்கியது மத நம்பிக்கைகள் கடவுள் நம்பிக்கை மேல் ஐயம் கொள்ள வைத்தது.
சூரியன் என்பது அணு சேர்க்கை(Fission) என்ற தத்துவத்தின் படி இயங்குகிறது என்று அறிவியல் பூர்வமாக எனக்கு விளங்கிய அதே நேரத்தில் சூரியன் என்ற ஒரு கதாபாத்திரம் கதைகளில் வருகிறதே அது அப்படியானால் யார் என்று குழம்பி மத நம்பிக்கைகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது.
ஆனால் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் அறிவியலால் விளக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் கடவுள் மேல் இருந்த நம்பிக்கைகள் முழுவதுமாக விட்டுப் போய் விடவில்லை.
ஆனால் இந்த காலகட்டத்தில் இறைவன் என்பவர் எல்லாமே என்ற நம்பிக்கைகள் உடையத் தொடங்கிய காலம் இது. ஆனால் இன்னும் முருகன், ராமர் என்ற அளவிலேயே கடவுளைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் இது. இந்த சமயத்திலும் இறைவன் என்பவருக்கு உருவம் என்பது தேவையானதாகவே இருந்திருக்கிறது.
ஆனால் இதே சமயத்தில் பொது அறிவு என்பது வளரத் துவங்கியது. அறிவியல், சரித்திரம் போன்ற அறிவுகள் வளர ஆரம்பித்தன.
அப்பொழுது உலகில் பல பிரச்சனைகளுக்கு காரணம் மதமே என்பது அறிந்து கொண்ட பொழுது மேலும் பல கேள்விகள் எழுந்தன.
சரித்திரம் இந்தியாவும் பாகிஸ்தானும் 1947க்கு முன் ஒரே பெயரால் ஒரே நிலப் பரப்பாக ஒரே பெயரில் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டை தன் ஜன்ம விரோதியாக கருதுகிறது. ஏன் என்று பார்த்தால் மதம்.
இப்படி மனிதனின் வரலாறு என்பது தெரியத் தெரிய மதம் என்பதே மனிதனின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
இந்த சமயத்தில் தான் அறிவியல் என்பது மேலும் பல விஷயங்களை கற்றுத் தர ஆரம்பித்தது. ஒரு விதையில் இருந்து ஒரு மரம் உருவாது செல் என்பது இரட்டிப்பதன் மூலம் என்று கற்றுத் தர இது போன்ற பல விந்தையாக விஷயங்களுக்கு விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன.
மேலும் இதே சமயத்தில் அறிவியல் என்பது நேர்மையானது மட்டும் அல்ல, அடக்கமானது என்பதும் புரிய ஆரம்பித்தது. மதம் போன்று குற்றம் குறைகளே கிடையாது நீ இதனை நம்பு இல்லையா விட்டு விடு என்றெல்லாம் அகங்காரமாக நடந்து கொள்ளவில்லை. மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையும் குறைவாகவே காணப்பட்டது.
மேலும் மனித குல அழிவு என்று ஒன்று ஏற்படுமானால் அது மதம் என்ற அமைப்பின் காரணமாகவே இருக்கும் என்ற நிலை இருக்கும் பொழுது இதைத் தவிர்க்க மதம் என்ற அமைப்பை எதிர்ப்பதே சரியானதாக தோன்றுகிறது.
இதில் கடவுள் நம்பிக்கை என்பது எங்கே இருக்கிறது என்று பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே கடவுள் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் அது மதம் சார்ந்த இறை நம்பிக்கையாக இருக்காது. குரானோ, பைபிளோ இல்லை இந்து மத நூல்களோ காட்டும் நம்பிக்கை சார்ந்த இறையாக இல்லாமல் அறிவியல் காண்பிக்கும் அறிவு சார்ந்த இறைவன் முழுமையானதாகவும் சச்சரவுகள் குறைவானதாகவும் தோன்றுகிறது.
ஏனெனில் அறிவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது. குல்லா போட்டுக் கொள்ள வேண்டும், பட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கைகளை வளர்ப்பதில்லை.
தேவாரம் பாடப் படும் சமயம் கவியின் சொற் சுவையும், கற்பனைச் சுவையுமே மயக்குகிறதே தவிர அது குறிக்கும் இறைவன் என் அறிவை மயக்குவதில்லை.
Tuesday, October 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//மேலும் மனித குல அழிவு என்று ஒன்று ஏற்படுமானால் அது மதம் என்ற அமைப்பின் காரணமாகவே இருக்கும் என்ற நிலை இருக்கும் பொழுது இதைத் தவிர்க்க மதம் என்ற அமைப்பை எதிர்ப்பதே சரியானதாக தோன்றுகிறது.
//
மதத்தின் மூலம் அழிவு ஏற்பட்டால் அதற்கு இன்றைய காலகட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளே பேருதவி புரியும் !
:))
பதிவை நிதானமாக எழுதியிர்க்கிறீர்கள் !
பாராட்டுக்கள் !
எ.டி.எம் மிசினும், கம்பெனி எம்டியும் தாங்க இப்பெல்லாம் கடவுள் !
:)
குமரன்,
உங்களின் அடுத்த பகுதி எப்பொழுது வரும்? என ஏங்க வைத்துவிட்டிர்கள்.... நல்ல பதிவு. :-)
மிகப் பெரிய பிரபஞ்சத்து ரகசியத்தை இத்தொடரில் வெளிக் கொணரமுடியுமா..???
//பலருக்கும் ஆன்மீகத்தின் அறிமுகம் தங்களுடைய தாயாரின் மூலமே கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்//
செந்தில் குமரன். எங்க வீட்டில என் மகளுக்கு அவ தந்தையார் மூலமா கிடைக்குது. :-)
உங்களின் தற்போதைய மன நிலையை நன்கு சொல்லில் வடித்திருக்கிறீர்கள். :-)
ஆம்.மதங்கள்,மனிதனின் தன்னம்பிக்கையை கொன்று,அவனை அடிமைபடுத்தி,பயமுறுத்தி,அலைய விடுகிறது.
Post a Comment