Sunday, January 13, 2008

அறிவியலும் ஆன்மீகமும் - 16

புது வருடத்தில் இருந்து மீண்டும் பதிவுகள் முன் போல் இட ஆரம்பிக்க வேண்டும் என்பது போல யோசித்திருந்தாலும் வருடம் ஆரம்பித்து 15 நாட்கள் கழித்தே பதிவுகள் இட ஆரம்பிக்க முடிந்திருக்கிறது.

History சேனலில் புதன் தோறும் "Universe" என்றொரு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் பார்க்க முடியாவிட்டாலும் பார்த்த வரை இந்தத் தொடரின் எல்லாப் பகுதிகளும் மிகச் சிறப்பாகவே இருக்கின்றன. அந்தத் தொடரில் பார்த்த ஒரு பகுதியால் கவரப் பட்டு அதனைப் பற்றி இணையத்தில் படித்ததை பகிரவே இந்தப் பகுதி.

நாம் வாழும் பூமி சுமார் 4.55 பில்லியன்(455 கோடி) வருடங்களுக்கு முன்னால் உருவானது. பூமி உருவானது எவ்வாறு என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் இப்படித்தான் உருவாகி இருக்க வேண்டும் என்று பல சித்தாந்தங்கள் உள்ளன. அவற்றில் பலரால் ஏற்றுக் கொள்ளப் படும் சித்தாந்தம் நெபுலா ஹைப்போதீஸில்(Nebula hypothesis). இந்த சித்தாந்தத்தின் படி சுமார் 5 பில்லியன்(500 கோடி) வருடங்களுக்கு முன்னால் நம்முடைய சூரிய மண்டலம் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய வாயு மண்டலம் இருந்திருக்க வேண்டும். இந்த வாயு மண்டலமானது சுருங்கி வெடிக்கும் சமயம் அதனுடைய மையத்தில் நமது மண்டலத்தின் நட்சத்திரமான சூரியன் உருவானது. நம்முடைய சூரிய மண்டலமே இந்த சமயத்தில் மிக மிக வெப்பமாக இருந்திருக்கும். இந்த வெப்பமானது குறையத் தொடங்கிய சமயம் சூரியனைச் சுற்றி உள்ள தூசிகள் எல்லாம் சேர்ந்து உருவானது தான் நம்முடைய பூமி என்கிறது இந்த சித்தாந்தம்.

இதற்கு மாற்றாக வேறு சில சித்தாந்தங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு இறந்து போன நட்சத்திரம் மீண்டும் உயிர்த்தெழும் சமயம் நம்முடைய பூமி போலவே கோள்களை உருவாவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இப்படி உருவான பூமி அந்த சமயத்தில் பூமியில் எல்லாமே உருகிய நிலையில் தான் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறைய உருகியவை இணைய ஆரம்பித்து தான் பூமியில் கற்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த சமயத்தில் பூமி முழுவதும் எரிமலைகளாக தோன்ற ஆரம்பித்து அதில் இருந்து கரியமலவாயு(கார்பன் டை ஆக்சைட்), மீதேன் போன்ற வாயுக்கள் வெளியேற ஆரம்பித்தன. அந்த சமயத்தில் பூமியில் பிராண வாயு(ஆக்ஸிஜன்) என்பது துளி கூட கிடையாது.

இப்படி இருக்கும் சமயத்தில் தான் பூமியில் 3.8 பில்லியன்(380 கோடி) வருடங்களுக்கு முன்னால் முதன் முதலாக நுண்ணுயிர்கள்(ஒரு செல் உயிரினங்கள்) தோன்ற ஆரம்பித்தன. அப்போது பூமியில் இருந்த வெப்ப நிலை மிக மிக மிக அதிகமானது இன்று பூமியில் இருக்கும் எந்த ஒரு உயிரினமும் அந்த சமயத்தில் பூமியில் தாக்குப் பிடித்து இருக்க இயலாது. இந்த வகை உயிரினங்களை எக்ஸ்டிரிமொபைல்(Extremophile) என்று அழைக்கிறார்கள்.

இவ்வகை உயிரினங்கள் மிக கடுமையான அல்லது மற்ற உயிர்களால் தாக்குப் பிடிக்க இயலாத சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடிக்கும் வல்லமை பெற்றவை.

இவ்வகை உயிரினங்கள் இன்று நம்மிடையே பூமியில் இல்லை என்றே பெரும்பாலானோர் நினைத்து வந்திருந்தனர். ஆனால் எரிமலைகளுக்கு அருகில் இருக்கும் நீர்நிலைகளில் மிக வெப்பமான சூழ்நிலைகளிலும் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டு பிடித்த உடன் இன்னும் இவ்வகை உயிரினங்கள் நம்மிடையே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இவ்வகை உயிர்கள் உருவாகுவதற்கும் அந்த சமயத்தில் பூமியில் தண்ணீர் உருவானதும் ஒரு வகை காரணமாக இருந்திருக்கிறது.

பூமியில் எப்படி தண்ணீர் உருவானது என்பதற்கு இன்றும் விஞ்ஞானிகளிடையே தெளிவான விளக்கங்கள் இல்லை. எப்படி இந்த அளவு தண்ணீர் உருவாகி இருக்கலாம் என்பதற்கு பல விதமான விளக்கங்கள் நிலவி வருகின்றன.

அதில் ஒரு விளக்கம், விண்கற்கள் வால் நட்சத்திரங்களில் பூமியில் மோதும் சமயம் அதில் இருக்கும் பனியானது உருகி தண்ணீர் உருவானது(பூமி முதன் முதலில் உருவான சமயம் விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் பூமியில் வந்து மோதுவது ஒரு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக இருந்தது) என்பது. தண்ணீர் இதன் மூலமாக வந்திருக்கலாம் என்பதற்கு மிக அதிகமான சாத்தியங்கள் இருந்திருந்தாலும் இப்படித்தான் என்று உறுதியாக அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை இன்றிருக்கிறது.

இன்னும் பல விதமான சித்தாந்தங்கள் தண்ணீர் எப்படி உருவானது என்பதற்கு நிலவி வருகிறது.

இப்படி உருவான தண்ணீரும் முதல் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பரிமாண வளர்ச்சி அடைந்து போட்டோசிந்தஸிஸ்(photosynthesis) மூலம் தன்னுடைய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்தன. இந்த போட்டோசிந்தஸிஸ் மூலமாகத்தான் கரியமலவாயுவை(carbon dioxide) பிராணவாயுவாக மாற்றி பூமியில் பிராண வாயு அளவு உயர காரணமாக அமைந்தது. இந்த நிகழ்வே இன்று பூமியில் நாம் நடமாட காரணியாக இருக்கிறது

கடவுள் மனிதனை தன்னுடைய வடிவமாக அமைத்தார் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மனிதன் கடவுளை தன்னால் புரிந்து கொள்ள இயலாத அற்புதங்களின் வடிவாக அமைத்திருக்கிறான். தேடலில் உள்ள பயமும் சலிப்புமே மனிதன் கடவுளை வடிவமைப்பதற்கு காரணியாக இருந்திருக்க வேண்டும்.

பூமி எப்படி உருவானது என்ற தேடல் கொடுத்த பயமும் சலிப்பும் தனக்கு எல்லாம் எல்லா சமயத்திலும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆணவமுமே கடவுள் பூமியைப் படைத்தார் என்ற அஞ்ஞானத்தை நம்மிடையே விதைத்திருக்க வேண்டும்.

ஆன்மீகம் என்பது ஒரு விதமான தேடல் என்பது மிகச் சிறப்பான கருத்து. தேடல் என்பதே ஆன்மீகம். தேடல் இல்லாமல் பழையன கழியாமல் புதியன புகுத்தலும் இல்லாமல் இருப்பது ஆன்மீகமாகாது. நம் பணி என்ன நாம் எதற்காக இங்கு இருக்கிறோம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடலில் தான் இருக்கிறது. ஆனால் தேடல் என்பது புதிய சிந்தாந்தங்களை சார்ந்து இல்லாமல் பழைய வேதாந்தங்களை சாரும் சமயம் அந்த வேதாந்தங்களைச் சார்ந்து அரசியல் செய்யும் குள்ள நரிகளை வளர்த்து நம் தேடல் தொலைந்து அஞ்ஞானமே மிஞ்சுகிறது.

வானில் நோக்கி தலை உயர்த்தி கடவுளை தினமும் புதிதாக பார்க்கும் திறன் நம்மிடையே இருக்கிறது அது போன்ற தேடல் தான் ஆன்மீகம் என்று அறியப்படுகிறது என்று நம்புகிறேன் நான்.

4 comments:

கோவி.கண்ணன் said...

குமரன்,

புத்தாண்டில் உங்கள் இடுகைகளை மீண்டும் பார்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவ்வப்போது எழுதுங்கள். அறிவியல் தகவல்களை எழுதும் பதிவர்கள் மிகவும் குறைவு. திரு ஜெயபரதன் ஐயாவும் எழுதுகிறார். உங்கள் எழுத்தில் படிப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் எழுத வந்ததற்கு மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி கோவி. கண்ணன். நீங்கள் கொடுத்த லிங்கைப் படித்தேன் அதனை நேரம் கீடைக்கும் சமயம் எழுதுகிறேன். தொடர்ச்சியாக ஊக்கம் கொடுத்து வருவதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

வாங்க செந்தில் குமரன். புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகள்.

இது வரை நான் படித்தவற்றில் நெபுலா ஹைபாதிஸிஸ் தான் படித்திருக்கிறேன். இறந்த நட்சத்திரங்களிலிருந்து புதிய நட்சத்திரமும் கோள்களும் உருவாவதைப் பற்றி படித்ததில்லை.

நீங்கள் சொன்ன எக்ஸ்டிமொபைல் நுண்ணுயிரிகளைப் பற்றி 2006ல் வந்த டிஸ்கவர் மாத இதழில் படித்த நினைவு இருக்கிறது. மிக்க வியப்பான செய்தியாகத் தான் இருந்தது அப்போது.

நீரும் பிராணவாயுவும் எப்படி வந்தன என்பதையும் உயிர்களின் தோற்றத்தையும் நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

குமரன் உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆன்மீகத்தில் மட்டும் இல்லை அறிவியலிலும் பெரிய ஆள் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறீர்கள் குமரன்.